Skip to main content

Advertisement

'என் மகள் பிறந்த நாள் வரை நான் கர்ப்பமாக இருந்ததை ஏற்கவே இல்லை': என்ன காரணம்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மகள் பிறந்த பிறகு, ஷானன் சீனியருக்கு ‘கர்ப்பத்தை உணர்வுபூர்வமாக ஏற்க மறுக்கும் நிலை’ இருப்பது கண்டறியப்பட்டது
BBC
மகள் பிறந்த பிறகு, ஷானன் சீனியருக்கு 'கர்ப்பத்தை உணர்வுபூர்வமாக ஏற்க மறுக்கும் நிலை' இருப்பது கண்டறியப்பட்டது

ஷானன் சீனியர் 14 ஆண்டுகளாக செவிலியராகப் பணியாற்றி வந்தார். ஆனால், 2023-ஆம் ஆண்டு தனது முதல் குழந்தைக்காக கர்ப்பமானபோது, தனக்கு என்ன நடக்கிறது என்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.

"இது என் வாழ்க்கையை அழித்துவிடும் என்று நான் நினைத்தேன். அதனால் முழுமையான அதிர்ச்சிக்குள்ளானேன். அந்த ஒன்பது மாதங்களும் நான் கர்ப்பமாக இருப்பது பற்றிய எண்ணமே எனக்கு இல்லை. அது நடக்கவே இல்லை என்பது போல இருந்தது'' என்கிறார் ஷானன் சீனியர்.

பிரிட்டனின் சோலிஹல் பகுதியைச் சேர்ந்த சீனியர், குழந்தைக்காகத் தயாராவதைத் தவிர்த்தார். குழந்தைக்கான அறையை அலங்கரிப்பது உள்ளிட்ட எந்த ஏற்பாடுகளையும் அவர் செய்யவில்லை. தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை மறைப்பதற்காக மருத்துவமனையில் அணியும் சீருடையையும் அணிந்துகொண்டார்.

"என் உடல் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிட்டது. 'நீ எதில் சிறந்தவளோ, அதிலேயே கவனம் செலுத்து. அதுதான் செவிலியர் பணி' என்று என் மனம் நினைத்தது. நாங்கள் மருத்துவமனையில் அணியும் சீருடை, வயிற்றின் பெருத்த தோற்றத்தை நன்றாக மறைத்துவிட்டது."

பின்னர், சீனியரின் நிலை கர்ப்பத்தை உணர்வுபூர்வமாக ஏற்க மறுக்கும் நிலை என்று அடையாளம் காணப்பட்டது. இதில் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவுப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும், அதை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பார்.

சீனியருக்கு கர்ப்பகால உயர் ரத்த அழுத்தப் பிரச்னையான ப்ரீ-எக்லாம்ப்சியா ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம் 170 வரை உயர்ந்ததால், அவருக்கு அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

"மருத்துவமனைக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தையுடன் வெளியே வந்தேன்.

"நான் சம்மதப் படிவத்தில் கையெழுத்திட்டபோதுதான் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு முழுமையாக நிலைகுலைந்துவிட்டேன்."

அவரது மகள் லில்லி பிறந்த பிறகும், தான் எதிர்பார்த்த தாய்மை உணர்வை ஏற்படுத்திக்கொள்ள சீனியர் சிரமப்பட்டார்.

"அவள் பிறந்த முதல் ஒன்பது வாரங்களுக்கு, எல்லோரும் எதிர்பார்க்கும் விதமான அம்மாவாக நான் இருக்கவில்லை. குழந்தை பிறந்தவுடன் அளவில்லாத அன்பை உணர்வீர்கள்' என்று எல்லோரும் கூறினார்கள். ஆனால், எனக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் லில்லியை என் மீது வைத்தபோது, 'எனக்கு அவளைப் பிடித்துக்கொள்ள விருப்பமில்லை, என் மீது வைக்காதீர்கள்' என்பது போல உணர்ந்தேன்," என்றார்.

'நான் தாங்க முடியாத நிலையை அடைந்தேன்'

2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், தனது மனநலம் மேலும் மோசமடைந்ததாக அவர் கூறுகிறார்.

காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட மன அழுத்தம் நிறைந்த பணிக்கு பிறகு, அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார்.

"என்னால் நோயாளிகளுக்குக்கூட செவிலியராகப் பணியாற்ற முடியவில்லை என்றால்... என்னால் ஒரு நல்ல அம்மாவாக இருக்க முடியவில்லை என்றால், என் சொந்த மகளை என்னால் அமைதிப்படுத்த முடியவில்லை என்றால், நான் இங்கு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்தேன்," என்று அந்தத் தாய் கூறினார்.

பின்னர், அவர் மருத்துவச்சிகள் மற்றும் சுகாதாரப் பார்வையாளர்களிடம் தொழில்முறை உதவியை நாடினார். அது தனது நிலையைச் சீராக்க உதவியதாக அவர் கூறுகிறார்.

"எனது சுகாதாரப் பார்வையாளர் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவர். நான் முதலில் என்னைப் பற்றிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் இல்லாமலும் தேசிய சுகாதார சேவை இயங்கும்... உண்மையில், இப்போதும் அது இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. நான் அங்கு பணியாற்றாமல் விட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன," என்றார்.

'இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது'

தற்போது, சீனியர் தனது இரண்டாவது குழந்தைக்காக ஆறு மாத கர்ப்பமாக உள்ளார். இந்த முறை அவருக்கு ஆண் குழந்தை பிறக்கவுள்ளது.

முதல் கர்ப்பத்துடன் ஒப்பிடும்போது, இந்தக் கர்ப்பம் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த முறை தான் கர்ப்பமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளவும், குழந்தைக்காகத் தயாராகவும் தன்னால் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட மனநல நெருக்கடியை அனுபவித்துள்ள நிலையில், கர்ப்ப காலத்திலோ அல்லது குழந்தை பிறந்த பிறகோ சிரமங்களை எதிர்கொள்பவர்கள், தாங்க முடியாத நிலையை அடைவதற்கு முன்பே உதவியை நாட வேண்டும் என்று சீனியர் விரும்புகிறார்.

"உதவி கேட்கத் தயங்காதீர்கள். உங்களை கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்க மாட்டார்கள், உங்களை எங்கும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். உங்கள் குழந்தைகளையும் நிச்சயமாக உங்களிடமிருந்து பிரிக்க மாட்டார்கள்.

நீங்கள் தாங்க முடியாத நிலையை அடைந்த பிறகு, அது நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது நடக்கத் தொடங்குவதை நீங்கள் உணர்ந்தவுடனேயே உதவியை நாட வேண்டும். உண்மையாகச் சொன்னால், அந்த உதவி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது," என்று அவர் கூறினார்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான இந்தியாவில் உள்ள உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!