Skip to main content

Advertisement

'109 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாருக்கு ரூ.35,000 கடன் கொடுத்தோம்': திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்

 ஜும்மலால் ருதியா
Gautam Ruthiya
அந்தக் குடும்பத்திடம் ஜும்மாலால் ருதியாவின் பழைய புகைப்படங்கள் உள்ளன, அதில் அவர் தனது காரோடு காணப்படுகிறார்.

மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.

தற்போது, 109 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜும்மாலால் ருதியாவின் குடும்பத்தினர், 1917ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி தேதியிடப்பட்ட சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அதில், பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் செலுத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகை போபால் ஏஜென்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அரசியல் முகவர் மூலம் வழங்கப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தற்போது, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்த தகவல்களை வழங்குமாறு பிரிட்டனின் கடன் மேலாண்மை அலுவலகம் (டிஎம்ஓ) அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளது.

குடும்பத்தினர் கண்டறிந்தது எப்படி?

சேத் ஜும்மாலால் ருதியா மற்றும் அவரது மனைவியின் புகைப்படம்
Gautam Ruthiya
சேத் ஜும்மாலால் ருதியா மற்றும் அவரது மனைவியின் புகைப்படம்

ஜும்மாலால் ருதியாவின் கொள்ளுப்பேரனான கௌதம் ருதியா கூறுகையில், பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த விவகாரத்தை மேலதிக விசாரணைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், ஆவணங்களைச் சரிபார்க்க சில தகவல்களையும் கேட்டுள்ளனர்.

கௌதம் ருதியா பிபிசியிடம் தொலைபேசியில் பேசுகையில், "இந்த விவகாரத்தை உறுதிப்படுத்த சில தகவல்களை அளிக்குமாறு பிரிட்டிஷ் அரசு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சரிபார்ப்புக்காக அவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் அனுப்பி வருகிறோம்" என்றார்.

எனினும், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பிரிட்டிஷ் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆவணங்களைக் கோரியிருப்பது, தற்போது இந்தக் கோரிக்கையைச் சரிபார்க்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக உள்ளது.

ஜும்மாலாலின் பேரனும், கௌதமின் தந்தையுமான வினய் ருதியா, பிரிட்டிஷ் அரசின் ஆரம்பகட்ட பதிலால் குடும்பத்தினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பல மாதங்களுக்குப் பிறகு, பிரிட்டன் அரசிடமிருந்து எங்களுக்கு பதில் கிடைப்பது இதுவே முதல் முறை. எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பணத்தைத் தாண்டிய ஒன்றாகிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை, இது எங்கள் மூதாதையர்களின் பாரம்பரியம் தொடர்பான விஷயம்" என்றார்.

இந்த ஆவணம் குறித்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததாக வினய் ருதியா கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டின் தொடக்கத்தில், வேறு ஒரு வழக்கு தொடர்பான பழைய ஆவணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கப்பட்ட கடன் ஆவணத்தைக் கண்டுபிடித்தோம். இதையடுத்து, ஒரு வழக்கறிஞர் மூலம் பிரிட்டிஷ் அரசைத் தொடர்புகொண்டோம்" என்றார்.

இந்த ஆவணம் குறித்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததாக வினய் ருதியா கூறினார்.
Gautam Ruthiya

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குக் கடன் கொடுத்தது ஏன்?

ஜும்மாலாலின் பேரனும், கௌதமின் தந்தையுமான வினய் ருதியா, பிரிட்டிஷ் அரசின் ஆரம்பகட்ட பதிலால் குடும்பத்தினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாகக் கூறினார்.
Gautam Ruthiya
குடும்பத்தினரிடம் உள்ள ஆவணம், கடன் வழங்கப்பட்ட தேதி ஜூன் 4, 1917ஆம் ஆண்டு எனக் குறிப்பிடுகிறது.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, முதல் உலகப் போரின்போது ஜும்மாலால் ருதியா இந்தத் தொகையை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியிருந்தார்.

இது குறித்து வினய் ருதியாவிடம் கேட்டபோது, "முதல் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் இந்திய வீரர்களும் போரில் பங்கேற்றனர். அந்த நேரத்தில், வீரர்களைப் பராமரிப்பதற்காக பிரிட்டிஷ் அரசு பணம் வசூலித்து வந்தது. "இதன் ஒரு பகுதியாக, போருக்குச் சென்ற இந்திய வீரர்களின் செலவுகளுக்காக எனது தாத்தா ஜும்மாலால் ஜி இந்தப் பணத்தை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கினார்" என்றார்.

குடும்பத்தினரிடம் உள்ள ஆவணத்தில், இந்தக் கடன் வழங்கப்பட்ட தேதி 1917ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜும்மாலாலின் குடும்பத்தினர் இதை போர்க்கடன் என்று அழைக்கின்றனர்.

வழக்கமான வங்கிக் கடனைப் போல, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற குறிப்பிட்ட காலக்கெடு இதற்கு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

கௌதம் ருதியா கூறுகையில், "இது வங்கிக் கடன் தொடர்பான ஆவணமாக இருந்திருந்தால், ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது போன்ற காலக்கெடு இருந்திருக்கும். ஆனால், இது ஒரு போர்க்கடன். அதாவது, போருக்காக வழங்கப்பட்ட கடன். போர் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எப்போது முடிவடையும் என்பது உறுதியாகத் தெரியாது" என்றார்.

இந்த ஆவணம் குடும்பத்தின் பழைய பதிவுகளில் இருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் அதைப் பற்றி தனக்குத் தெரியவந்ததாகவும் கௌதம் ருதியா கூறுகிறார்.

தற்போது, குடும்பம் தொடர்பான ஆவணங்கள், குடும்ப மரபுவழிப் பட்டியல், பழைய சான்றிதழ்கள், அப்போது வழங்கப்பட்ட பணம் மற்றும் அந்தக் காலத்தில் இருந்த நிறுவனத்துடன் தொடர்புடைய தகவல்களைக் கோரி பிரிட்டிஷ் அதிகாரிகள் கேட்டுள்ளதாக கௌதம் தெரிவித்தார்.

1917ஆம் ஆண்டு பணம் வழங்கிய குடும்பமும், தற்போது அந்தப் பணத்தைக் கோரும் குடும்பமும் ஒன்றுதானா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்று கௌதம் ருதியா கூறுகிறார்.

ரூ. 35,000 கடனின் இன்றைய மதிப்பு எவ்வளவு?

ருதியா குடும்பத்தினர், 1917ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 35,000 ரூபாயின் தற்போதைய மதிப்பையும் கணக்கிட்டு வருகின்றனர்.

கௌதம் ருதியா கூறுகையில், குடும்பத்தினர் தங்களது கோரிக்கையில் அசல் தொகையுடன் வட்டி, கூட்டு வட்டி மற்றும் பிற செலவுகளையும் சேர்க்க உள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் முழுமையான தொகையைக் கோருவோம். 35 ஆயிரம் ரூபாய் எங்களது அசல் தொகை. அதற்கு வட்டி உள்ளது, கூட்டு வட்டி உள்ளது. ஏற்படக்கூடிய செலவுகள் அனைத்தையும் சேர்ப்போம். பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இவை அனைத்தையும் கணக்கிட்டு, இன்றைய பண மதிப்புடன் ஒப்பிடுவோம்" என்றார்.

இந்தக் குடும்பம், 109 ஆண்டுகளுக்குப் பிறகு கூறப்படும் இந்தக் கடனுக்குப் பதிலாக எவ்வளவு பணம் கேட்க வேண்டும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

2015-ஆம் ஆண்டில், பிரிட்டன் முதலாம் உலகப் போர்க் கடனான 2.2 பில்லியன் பவுண்டுகளைத் திருப்பிச் செலுத்தியது

ஜும்மலால் ருதியாவின் பேரனான வினய் ருதியா
Gautam Ruthiya
ஜும்மாலால் ருதியாவின் பேரனான வினய் ருதியா, தனது தாத்தா தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

வினய் ருதியாவின் கூற்றுப்படி, முதல் உலகப் போரின் போது பெறப்பட்ட பழைய கடனில் பெரும் பகுதியை பிரிட்டிஷ் அரசு 2015ஆம் ஆண்டு திருப்பிச் செலுத்தியது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆய்வின்போது, 2015ஆம் ஆண்டு முதல் உலகப் போருக்கான கடனில் கணிசமான தொகையை பிரிட்டிஷ் அரசு செலுத்தியது தெரியவந்தது. இவை சுமார் 1917ஆம் ஆண்டு பெறப்பட்ட கடன்கள். அவற்றை 2015ஆம் ஆண்டு அவர்கள் திருப்பிச் செலுத்தினர்" என்றார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதிலின்படி, முதல் உலகப் போரில் இருந்து சுமார் 220 கோடி பவுண்ட் அளவிலான நிலுவைக் கடன் அரசிடம் இருந்தது. இதில் ஒரு சிறிய பகுதி போர்க்கடன்களாக இருந்தது. அவை 2015ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி திருப்பிச் செலுத்தப்பட்டன.

மற்றொரு சிறிய பகுதி ஒருங்கிணைந்த கடன்களாகவும், மாற்றுக் கடன்களாகவும் இருந்தன. அவையும் 2015ஆம் ஆண்டு திருப்பிச் செலுத்தப்பட்டன.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட மற்றொரு பதிலின்படி, 4% ஒருங்கிணைந்த கடனும், 3.5% போர்க்கடனும் முதல் உலகப் போருக்காக பணம் திரட்டுவதற்காக வெளியிடப்பட்ட அரசு பத்திரங்களாகும்.

அந்தக் காலத்தில் வெளியிடப்பட்ட அனைத்து போர்க்கடன் பத்திரங்களிலும் இந்த இரண்டு பத்திரங்களும் சேர்ந்து சுமார் 99% ஆக இருந்தன.

இருப்பினும், பிரிட்டன் 2015ஆம் ஆண்டு இந்தப் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தியது என்பதால், 1917ஆம் ஆண்டு ஜும்மாலால் ருதியா வழங்கிய 35,000 ரூபாயும் இந்தப் பத்திரங்களில் சேர்க்கப்பட்டிருந்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது.

ஜும்மாலால் ருதியா என்பவர் யார்?

குடும்பத்தினரின் கூற்றுப்படி, அந்தக் காலத்தில் ஜும்மாலால் ருதியா அந்தப் பகுதியின் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தார்.

அவரது பேரனான வினய் ருதியா கூறுகையில், ஜும்மாலால் ருதியாவிடம் சுமார் 3,000 மாடுகளைக் கொண்ட பெரிய மாட்டுத் தொழுவமும் இருந்தது.

ஜும்மாலால் ருதியாவின் பழைய புகைப்படங்களும், அந்தக் காலத்தில் அவர் பயன்படுத்திய வாகனத்தின் புகைப்படமும் குடும்பத்தினரிடம் உள்ளன.

தங்களது பழைய தொழில் மற்றும் குடும்பம் தொடர்பான பிற ஆவணங்களும் இருப்பதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அவர் மேலும் கூறுகையில், "இதுமட்டுமின்றி, எனது தாத்தாவுக்கு மிகப்பெரிய தொழில் இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அபின் பயிரிட்டு வந்தார். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருந்தது.

"எனவே, அவர் கடன் கொடுத்தாரா இல்லையா என்பதல்ல கேள்வி. அவரிடம் பணம் இருந்தது. மேலும், அவர் கடன் வழங்கியதற்கான ஆவணமும் உள்ளது. இப்போது பிரிட்டிஷ் அரசு இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் கேள்வி" என்றார்.

ஜும்மாலால் ருதியா, கடன் வழங்கப்பட்டு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1937ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தத் தொகை ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படவில்லை அல்லது கணக்குத் தீர்க்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.

'ஆவணங்களும் தகவல்களும் இன்னும் சரிபார்க்கப்படவில்லை'

தற்போது, பிரிட்டிஷ் அதிகாரிகள் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

குடும்பத்தினரிடம் கோரப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

அதன் பின்னர் தான், 1917ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 35,000 ரூபாய் தொடர்பான ஆவணங்கள் பிரிட்டிஷ் அரசின் பதிவுகளுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பது தெரியவரும்.

மேலும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமரச தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் குடும்பத்தினர் பரிசீலித்து வருகின்றனர்.

அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று வினய் ருதியா கூறுகிறார்.

109 ஆண்டுகள் பழமையான இந்த விவகாரத்தில், தற்போது பிரிட்டிஷ் அதிகாரிகள் கேட்டுள்ள ஆவணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!