ஆழமாக சிந்திக்கும் திறன் இருப்பதாலேயே பரிணாம வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாக மனிதர்களாகிய நாம் பெருமையாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால், அந்த அளவுக்கு சிந்தித்தும் பல நேரங்களில் நாம் விரும்பிய முடிவுகளை எட்ட முடியாமல் போகிறது. நாம் தவறற்றவர்கள் அல்ல, அடிக்கடி தவறான முடிவுகளையும் எடுக்கிறோம்.
மறுபுறம், சிறிய கசகசா விதை அளவிலான மூளையைக் கொண்ட பூச்சிகள், முடிவெடுக்கும் விஷயத்தில் ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகின்றன. உண்மையில், பூச்சிகளின் பல பிரச்னைகளை தீர்க்கும் திறன்கள், மனிதர்களின் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் திறமையான முடிவுகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அல்காரிதம்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளன.
இதன் அடிப்படையில், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பது குறித்து பூச்சிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.
எறும்புக் கூட்ட மேம்பாட்டு முறை
ஒரு செயலைச் சிறப்பாக முடிக்க எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது எளிதான காரியமல்ல. குறிப்பாக, ஏராளமான தகவல்களும் தூண்டுதல்களும் நிறைந்த இன்றைய உலகில் இது இன்னும் சிக்கலானதாகிறது. இதையே "அதிகப்படியான தேர்வுகளால் ஏற்படும் குழப்பம்" (Choice Overload) என்று அழைக்கிறார்கள்.
எறும்புகளும் இதேபோன்ற ஒரு சவாலை எதிர்கொள்கின்றன. அவை கூட்டமாக இணைந்து உணவு தேடிச் செல்ல வேண்டிய அடுத்த இடத்தைத் தேர்வு செய்யும்போது இந்த பிரச்னை உருவாகிறது. ஆனால், இதற்குப் பல்வேறு வகை உயிரினங்களில் காணப்படும் ஒரு திறமையான தந்திரத்தை அவை பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவாக்கிக் கொண்டுள்ளன.
முதலில், சில எறும்புகள் தங்கள் புற்றின் பாதுகாப்பான சூழலை விட்டு வெளியேறி, அருகிலுள்ள மற்றும் சிறந்த உணவு கிடைக்கும் இடத்தைத் தேடிச் செல்கின்றன. இந்த சாகச எறும்புகள் எந்தவொரு குறிப்பிட்ட வழியையும் முன்கூட்டியே தேர்வு செய்யாமல், பல்வேறு பாதைகளில் சீரற்ற முறையில் சென்று ஆராய்கின்றன.
அவை செல்லும் வழியிலும் திரும்பி வரும் வழியிலும், பிற எறும்புகள் பின்னர் பின்தொடர்வதற்காக தரையில் மெல்லிய ஃபெரோமோன் என்ற ரசாயனத் தடங்களை விட்டுச் செல்கின்றன. இந்த ஃபெரோமோன் காலப்போக்கில் ஆவியாகி மறைந்துவிடும். பொதுவாக, எறும்புகள் அதிகம் அடர்த்தியான ஃபெரோமோன் தடத்தையே பின்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
மிகவும் திறமையான உணவு தேடும் இடத்தைக் கண்டுபிடித்த எறும்புகள், உணவுடன் விரைவாகத் தமது புற்றுக்குத் திரும்புகின்றன. அவை, ஃபெரோமோன் முழுவதுமாக மறைவதற்கு முன்பே அதே தடத்தின் மீது மீண்டும் செல்வதால், அந்தத் தடம் மேலும் வலுவாகிறது. அதே நேரத்தில், உணவு தேடிச் செல்லும் பிற எறும்புகளுக்கும் அவை விரைவாக தகவலைக் கடத்துகின்றன.
இதன் விளைவாக, காலப்போக்கில் அதிகமான எறும்புகள் அதே பாதையில் சென்று வரத் தொடங்குகின்றன. இதனால் அந்தப் பாதையில் கூடுதலான ஃபெரோமோன் சேர்ந்து, அதன் வாசனை மேலும் வலுவடைகிறது.
இவ்வாறு, உண்மையில் குறுகிய மற்றும் திறமையான பாதைகள் தொடர்ந்து வலுப்பெறுகின்றன. அதேநேரம், குறைந்த பயன்களைக் கொண்ட பிற பாதைகள் மெதுவாக மறைந்துபோகின்றன. இறுதியில், எந்தவொரு தனிப்பட்ட எறும்பும் தனியாக சரியான பாதையை அறியாவிட்டாலும், முழு எறும்புக் கூட்டமும் இணைந்து மிகக் குறுகிய மற்றும் சிறந்த பாதையைக் கண்டுபிடித்து விடுகின்றன.
பெல்ஜியத்தின் லிபர் டி ப்ரஸ்செல் (Université Libre de Bruxelles) பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தின் இணை இயக்குநரான மார்கோ டோரிகோ இது தொடர்பாகப் பேசியபோது, "மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு இல்லாமலேயே திறமையான கூட்டுத் தீர்மானங்கள் உருவாக முடியும் என்பதே இதிலுள்ள முக்கியமான பாடம். எறும்புகள் எளிமையான உயிரினங்கள். அவற்றின் திறன்களும் தகவல் அணுகலும் மிகுந்த வரையறைக்கு உட்பட்டவை. இருந்தாலும், அவற்றால் ஒன்றிணைந்து ஒருங்கிணைப்பு சார்ந்த சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிகிறது."
இந்த முறை எறும்புக் கூட்ட மேம்பாட்டு முறை (Ant Colony Optimization) என்று அழைக்கப்படுகிறது. இது பின்னர் மனிதர்களின் பயன்பாட்டுக்கான ஒரு அல்காரிதமாக மாற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அட்டவணை அமைத்தல், தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் தளவாட மேலாண்மை போன்ற துறைகளில் செயல்திறனை மேம்படுத்த இந்த அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, ரயில்வே திட்டமிடலில் நிபுணர்கள் எறும்புக் கூட்ட மேம்பாட்டு அல்காரிதங்களை பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, மார்கோ டோரிகோ AntNET என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு, தகவல் தொடர்பு வலையமைப்புகளுக்குள் தகவல்களை மிகவும் திறமையாக நகர்த்துவதற்கு உதவுகிறது.
தேனீக்களின் ஜனநாயக முறை
தேனீக்கள் புதிய கூட்டை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, எறும்புகளின் திறமையான உணவு தேடும் முறையைப் போன்ற ஓர் அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றன.
எறும்புகளைப் போலவே, பல கண்காணிப்புத் தேனீக்கள் (Scout Bees) சீரற்ற முறையில் பல திசைகளில் பறந்து சென்று புதிய இடங்களைத் தேடுகின்றன. ஆனால், எறும்புகளைப் போல ஃபெரோமோன் தடங்களை விடுவதற்குப் பதிலாக, அவை மீண்டும் தமது கூட்டுக்குத் திரும்பி, தங்கள் விருப்பமான இடங்களை நேரடியாக மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கின்றன.
இதற்காக அவை "வாகிள் நடனம்" (Waggle Dance) எனப்படும் ஒரு சிறப்பு நடனத்தை ஆடுகின்றன. இந்த நடனத்தின்போது, தங்கள் உடலை தாளமிட்ட அசைவுகளுடன் அசைத்து, கண்டுபிடிக்கப்பட்ட இடம் எவ்வளவு பாதுகாப்பானது, எவ்வளவு அருகில் உள்ளது, எவ்வளவு விசாலமானது, அதன் அமைவிடம் எவ்வளவு சிறந்தது என்பன போன்ற தகவல்களைப் பிற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.
கூடு அமைக்க ஏற்ற இடமாக அந்த இடம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அதற்கேற்ப அந்த நடனம் நீண்ட நேரமும் அதிக உற்சாகத்துடனும் நடைபெறும்.
இந்த வாகிள் நடனம், அந்த இடத்தின் சரியான இருப்பிடத்தையும் விளக்குகிறது. அதாவது, எவ்வளவு தூரம் பறக்க வேண்டும், எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதையும் இந்த நடனம் மூலம் மற்ற தேனீக்களுக்கு விவரிக்கிறது.
அதன் பிறகு, மற்றொரு குழு தேனீக்கள் அந்த இடத்துக்குச் சென்று, இந்தத் தகவல்கள் சரியானவையா என்பதை உறுதி செய்கின்றன. அவை திரும்பி வந்த பிறகு, தங்களுடைய முடிவையும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றன. சில நேரங்களில் முன்பு கூறப்பட்ட கருத்துகளை ஆதரிக்கின்றன, அதேபோல சில நேரங்களில் புதிய விருப்பங்களையும் முன்வைக்கின்றன.
காலப்போக்கில், அனைவராலும் விரும்பப்படும் ஓரிடம் இயல்பாகவே முன்னிலை பெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆதரித்து, பல தேனீக்கள் தொடர்ந்து நேர்மறையான நடனங்களுடன் திரும்பி வரத் தொடங்குகின்றன.
இவ்வாறு பெரும்பான்மை ஒப்புதல் (Quorum) உருவான பிறகு, மனிதர்களின் ஜனநாயக முறையைப் போல, முழுத் தேனீக் கூட்டமும் அந்த ஒருமித்த முடிவின் அடிப்படையில் புதிய இடத்துக்குச் செல்கின்றன.
வெட்டுக்கிளிகளின் நடுநிலைத் தன்மை
மக்களின் மனதை மாற்றுவது எளிதான காரியமல்ல. குறிப்பாக, ஒரு குழு இரு விருப்பங்களுக்கு இடையே சமமாகப் பிரிந்து நிற்கும்போது இது இன்னும் கடினமாகிறது. அப்போது விவாதங்கள் கருப்பு அல்லது வெள்ளை என்ற இருதரப்பு அணுகுமுறையாக மாறி, ஒவ்வொருவரும் தங்கள் நிலைப்பாட்டில் மேலும் உறுதியாக நிற்கும் சூழல் உருவாகலாம்.
அதிர்ஷ்டவசமாக, சமீபத்தில் வெட்டுக்கிளிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, இந்தப் பொதுவான சிக்கலில் இருந்து வெளியேறும் ஒரு வழியைக் காட்டுகிறது. அணிதிரளும் வெட்டுக்கிளிகள் (Marching Locusts) என்று அழைக்கப்படும் சில வெட்டுக்கிளிகள் இன்னும் பறக்கக் கற்றுக்கொள்ளாத இளம் பருவத்தில் இருப்பவை. அதனால் அவை பறப்பதற்குப் பதிலாக நடந்து நகர்கின்றன.
பிரிட்டனில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தின் (University of Bath) கணித உயிரியல் பேராசிரியரான கிறிஸ்டியன் யேட்ஸ், தனது ஆய்வில் இந்த வகை வெட்டுக்கிளிகளை வளைய வடிவிலான ஓர் அரங்கில் வைத்து, அவை கூட்டாக எவ்வாறு எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன என்பதைக் கவனித்தார்.
அப்போது, அவை அடிக்கடி திசைமாற்றம் செய்வதையும், அதற்கு முன் சிறிது நேரம் நின்று தயங்குவதைப் போன்ற ஒரு நிலை ஏற்படுவதையும் அவர் கண்டறிந்தார்.
உண்மையில், பல வெட்டுக்கிளிகள் தங்கள் அணிவகுப்பு நடையை நிறுத்தி, ஒரு நடுநிலை நிலைக்கு மாறும் அந்தச் சுருக்கமான இடைநிறுத்த காலம்தான், ஒரு கருத்தொற்றுமையில் இருந்து வெளியே வந்து மற்றொரு கருத்தொற்றுமைக்குத் திரளுக்கு மாற உதவுகிறது.
இந்த ஆய்வில், யேட்ஸ் 19 மனிதர்களிடமும் இதேபோன்ற ஒரு சோதனையை நடத்தினார். அதில், பங்கேற்பாளர்கள் எக்ஸ் (X) அல்லது ஒய் (Y) என்ற இரு தேர்வுகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் அல்லது விரும்பினால் எதையும் தேர்வு செய்யாமல் விலகியும் இருக்கலாம்.
வெட்டுக்கிளிகளைப் போலவே, மனிதர்களுக்கும் விலகி நிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, குழு ஒரு கருத்தொற்றுமையை அடைவது மிகவும் விரைவாகவும் சிக்கலின்றியும் நடந்ததாக யேட்ஸ் கூறுகிறார். இதற்கான காரணத்தை விளக்கும்போது, ஒரு பெரிய மற்றும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் குழுவில் பல சிறிய, தனித்தனி தாக்கங்கள் ஒன்றையொன்று சமநிலைப்படுத்திவிடும் என்றார். இதனால் குழுவின் மொத்த திசையை மாற்றுவது கடினமாகிறது. ஆனால், பலர் சிறிது நேரத்துக்காவது நடுநிலையாக மாறினால், முடிவெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது.
"செயலில் இருக்கும் வாக்குகள் குறைவாக இருந்தால், அதே சிறிய தாக்கமே பெரிய விளைவை ஏற்படுத்தும். உதாரணமாக, சிறிய குழு ஒன்று எதிர்த்திசையில் நகர்வது, தெளிவற்ற தகவல் ஒன்று பரவுவது அல்லது சிலர் தங்கள் ஆதரவை மாற்றுவது போன்றவை, குழுவின் மொத்த திசையில் அதிக விகிதாசார தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று யேட்ஸ் கூறுகிறார்.
இறுதியில், வெட்டுக்கிளிகள் நமக்கு கற்றுத் தருவது என்னவென்றால், நடுநிலைமை என்பது அனைவரும் தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து புதிய கருத்தொற்றுமையை உருவாக்க உதவும் அவசியமான இடைவேளையை வழங்குகிறது.
இதிலிருந்து பெற வேண்டிய முக்கியப் பாடம் என்ன?
இருக்கும் நிலையை மாற்ற விரும்பினால், தயக்கம் கொண்டவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். மாறாக, இன்னும் அதிகமானோர் சிறிது நேரமாவது நடுநிலையாக இருக்க ஊக்குவியுங்கள்.
கரப்பான்பூச்சிகளின் குணாதிசயங்கள்
ஒரு குழுவில் பல வலுவான ஆளுமைகள் இடம் பெற்றிருக்கும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முடிவை எடுப்பது மிகவும் கடினமாகிறது. "கதையின் நாயகன் நான்தான்" என்ற மனநிலையுடன் செயல்படும் பலர், குழுவின் ஒட்டுமொத்த கருத்தைவிட தங்களது கருத்தை முன்னிலைப்படுத்தி விவாதத்தின் திசையை மாற்றக்கூடும்.
ஆனால், கரப்பான் பூச்சிகளை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, ஒரு குழுவில் காணப்படும் வலுவான தனிப்பட்ட ஆளுமைகள் உண்மையில் முடிவெடுக்கும் வேகத்தை அதிகரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது.
சில கரப்பான் பூச்சிகள் துணிச்சலாகச் செயல்படும், மற்றவை பயந்த சுபாவம் கொண்டவை. இதை ஆய்வு செய்வதற்காக, ஜப்பானின் டோக்கியோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஐசக் பிளானாஸ்-சிட்ஜா, கரப்பான் பூச்சிகள் எவ்வாறு ஒன்றுகூடிச் செயல்படுகின்றன என்பதைப் பிரதிபலிக்கும் கணினி உருவகப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
உதாரணமாக, குளிர்சாதனப் பெட்டியின் பின்னாலுள்ள ஒரு குறிப்பிட்ட இருண்ட மூலையில் அவை எவ்வாறு ஒன்றாக ஒளிந்துகொள்கின்றன என்பதை ஒத்த ஒரு மாதிரியை உருவாக்கினார். பின்னர் அந்த அமைப்பில், "ஆளுமை வேறுபாடு எதுவும் இல்லாத நிலை, சில ஆளுமை வேறுபாடுகளைக் கொண்ட நிலை, அதிகமான ஆளுமை வேறுபாடுகளைக் கொண்ட நிலை" எனப் பல்வேறு மாற்றங்களைச் செய்து ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வில், அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதாகக் கருதப்பட்ட மாதிரிகள், இயற்கையில் கரப்பான் பூச்சிகள் எவ்வாறு முடிவெடுக்கின்றன என்பதைப் பிரதிபலிக்கவே முடியவில்லை என்பது தெரிய வந்தது.
மாறாக, அதிகமான ஆளுமை வேறுபாடுகளைக் கொண்ட குழுக்கள் மிகவும் விரைவாக கூட்டுத் தீர்மானங்களை எடுத்தன. இதற்குக் காரணம், அவற்றுக்கு இடையே அதிக அளவிலான சமூகத் தொடர்புகள் ஏற்பட்டதுதான்.
"இது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஏதாவது ஒரு போக்கு தெரியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு தெளிவான, மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தக்கூடிய ஒரு முறைமை கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை," என்று பிளானாஸ்-சிட்ஜா கூறுகிறார்.
அவரது விளக்கப்படி, துணிச்சலான அல்லது எப்போதும் ஆராயும் இயல்புடைய கரப்பான்கள் மட்டுமே இருந்த குழுக்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து பொருத்தமான தங்குமிடத்தைத் தேர்வு செய்வது கடினமாக இருக்கும். அதற்குக் காரணம், அவை அளவுக்கு அதிகமாக அசைந்து கொண்டிருப்பதால் நிலையாக ஓரிடத்தில் தங்குவதில்லை.
அதே நேரத்தில், மிக அதிகமான கூச்ச சுபாவம் கொண்ட கரப்பான்கள் உள்ள குழுக்கள் விரைவாக ஓரிடத்தில் தங்கிவிடலாம். ஆனால், அவை தேர்ந்தெடுக்கும் தங்குமிடம் தரமற்றதாக இருக்கும் அபாயம் உள்ளது.
"ஒத்துழைப்பின் அளவுக்கும், நடத்தைப் பன்முகத்தன்மைக்கும் இடையிலான நுணுக்கமான சமநிலையே இறுதியில் கூட்டுப் புத்திசாலித்தனத்தை உருவாக்குவதாக," பிளானாஸ்-சிட்ஜா கூறுகிறார்.
மேலும் விளக்கிய அவர், "இந்தச் சிறிய உயிரினங்களில்கூட ஆளுமை முக்கியப் பங்காற்றுகிறதெனில், இன்னும் சிக்கலான சமூக அமைப்புகளில் வாழும் உயிரினங்களிடம் அதனால் ஏற்படும் தாக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்" என்றார்.
பழ ஈக்களின் உள்ளுணர்வும் அனுபவப் பாடமும்
சில நேரங்களில், நமக்குள் எழும் உள்ளுணர்வுகளை (gut feelings) ஒதுக்கிவிட்டு, தர்க்கரீதியாக சரி என்று நினைக்கும் முடிவுகளை எடுக்கிறோம். அவை மனதளவில் தவறாகத் தோன்றினாலும் அப்படிச் செய்கிறோம். வேறு சில நேரங்களில், நமது ஆழமான நம்பிக்கைகளையே முழுமையாகப் பின்பற்றி, கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறோம்.
ஆனால், பழ ஈக்கள் (Fruit Flies) நமக்கு அதிக சுய விழிப்புணர்வுடன் முடிவெடுப்பது குறித்துப் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றன.
வெளிப்புறத் தகவல்களையும் உள்புறத் தகவல்களையும் ஒருங்கிணைத்து, தங்கள் ஒவ்வொரு செயலையும் பழ ஈக்கள் எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதில் அவை நுண்ணறிவு மிக்கவையாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
உதாரணமாக, இரு விதமான மணங்களுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்த மணங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்ததாக இருக்கும் அளவுக்கு, பழ ஈக்கள் முடிவெடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. அவை ஒவ்வொரு தேர்வின் நன்மை, தீமைகளைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது.
அதேபோல, சுவையாக இருந்தாலும் ஊட்டச்சத்து இல்லாத உணவுக்கும், கசப்பாக இருந்தாலும் ஊட்டச்சத்து நிறைந்த சர்க்கரைக் கலவைக்கும் இடையே தேர்வு செய்யும்போது, எந்தத் தேர்வு அதிக நன்மை பயக்கும் என்பதை பழ ஈக்களல் கணக்கிட முடிகிறது. அதன் காரணமாக, சுவையற்றதாக இருந்தாலும் ஊட்டச்சத்து கிடைக்கும் உணவைத் தேர்வு செய்து உட்கொள்கின்றன.
மேலும், சிறிய அளவிலான பரிசாக இருந்தாலும் பாதுகாப்பாகக் கிடைக்கும் ஒன்றைத் தேர்வு செய்யும் போக்கு அவற்றிடம் காணப்படுகிறது. பெரிய பரிசு கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் அதனுடன் ஆபத்தும் இருந்தால், அவை பொதுவாக அதைத் தவிர்க்கின்றன. ஆனால், அவை மிகவும் பசியுடன் இருந்தாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ, இந்த நடத்தை மாறக்கூடும்.
நேர்மறையான மணத்துக்கும் பரிசுக்கும் இடையே அல்லது எதிர்மறையான மணத்துக்கும் விளைவுக்கும் இடையிலான தொடர்பு கற்றுக் கொடுக்கப்பட்ட பிறகு, ஆரோக்கியமான பழ ஈக்கள் தெளிவற்ற அல்லது உறுதியற்ற ஒரு மணத்தையும் அணுகி அதிலிருந்து என்ன கிடைக்கிறது என்பதை அறிய முயல்கின்றன.
ஆனால், மன அழுத்தத்தில் உள்ள பழ ஈக்கள், ஆபத்தை ஏற்காமல் அந்த வாய்ப்பைத் தவிர்க்கும் பழக்கத்தைக் காட்டுகின்றன. மனிதர்களைப் போலவே, பழ ஈக்களும் தங்களது உள்நிலைகளின் தாக்கத்தால் சில நேரங்களில் முடிவெடுப்பதில் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அவை நமக்கு இன்னொரு முக்கியமான பாடத்தையும் கற்றுத் தருகின்றன.
அதாவது, நம் உள்ளுணர்வுகள் மற்றும் கடந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்பது நம்மையும் மற்றவர்களையும் பற்றித் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் எண்ணற்ற சிறிய உணர்வுகளின் தொகுப்பு. இவை சில நேரங்களில் நமக்குச் சரியான தீர்மானங்களை எடுக்க உதவும் மதிப்புமிக்க வழிகாட்டுதலாகவும் அமையலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு