Skip to main content

Advertisement

காதலியை திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ - 5 குழந்தைகளும் பங்கேற்பு

ரொனால்டோவும் ஜார்ஜினாவும் 10 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
Reuters
ரொனால்டோவும் ஜார்ஜினாவும் 10 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

கால்பந்து ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ராட்ரிகஸை போர்ச்சுகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டார்.

அவரும் அவரது காதலியும் கைகளில் திருமண மோதிரம் அணிந்தபடி உள்ள புகைப்படத்தை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதை இந்த ஆண்டின் மிகச்சிறந்த திருமணம் எனக் குறிப்பிடும் போர்ச்சுகல் ஊடகங்கள், ஆகஸ்ட் 11-ஆம் அன்று லிஸ்பனுக்கு அருகே உள்ள கடற்கரை நகரமான காஸ்கியஸில் அவர்களின் திருமணம் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன.

அவரின் ஐந்து குழந்தைகளும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அவரின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 30 நிமிடத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன

மேட்ரிட் நகரில் ஜார்ஜினா வேலை பார்த்து வந்த கடையில் இருவரும் சந்தித்த பிறகு 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். ரொனால்டோ அப்போது ஸ்பெயினைச் சேர்ந்த கிளப்பான ரியல் மேட்ரிட்டுக்கு விளையாடி வந்தார்.

கடந்த ஆண்டு அவர்கள் தங்களின் நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தனர். அந்தப் பதிவில் மிகப்பெரிய வைர மோதிரத்தை அணிந்திருந்த ஜார்ஜினா அவரின் தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில், "ஆம். இந்தப் பிறவியிலும், எனது அனைத்து பிறவிகளிலும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தங்கள் திருமணத்தை அறிவித்து ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்ட புகைப்படம்.
Ronaldo Instagram account
தங்கள் திருமணத்தை அறிவித்து ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்ட புகைப்படம்.

ரொனால்டோவுக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் அவருக்கும் ஜார்ஜினாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மற்ற மூன்று குழந்தைகளையும் வளர்க்க ஜார்ஜினா உதவி வரும் நிலையில், ரொனால்டோ குடும்பம் தற்போது சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வசித்து வருகிறது.

இந்தத் தம்பதியினரின் முதல் மகளான அலானா மார்டினா 2017-ஆம் ஆண்டு பிறந்தார். அவர்களின் இளைய மகளான பெல்லா 2022 ஏப்ரலில் பிறந்தார். அவர் உடன் பிறந்த இரட்டைச் சகோதரர் உயிரிழந்தார்.

ரொனால்டோ தனது விளையாட்டு பயணத்தில் சுமார் 1,000 கோல்களை அடித்துள்ளார். அவர் லிஸ்பனைச் சேர்ந்த ஸ்போர்டிங், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மேட்ரிட், ஜுவன்டெஸ், சௌதி அரேபியாவில் உள்ள அல் நசர் மற்றும் போச்சுகல் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

தற்போது போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனான ரொனால்டோ சமீபத்தில் தனது ஆறாவது மற்றும் இறுதி உலக கோப்பையில் விளையாடினார். இந்தச் சாதனையை அவர் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி உடன் பகிர்ந்து கொள்கிறார்.

41 வயதான ரொனால்டோ ஐந்து முறை பாலன் டி ஓர் விருதை வென்றுள்ளார். இதே விருதை அதிக முறை பெற்றவர்கள் பட்டியலில் எட்டு முறை வென்ற மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

2022-இல் அவர் இணைந்த தற்போதைய கிளப்பான அல்-நஸ்ர், அவர் இரண்டு ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த ஆண்டு உறுதிப்படுத்தியது. இதன் மூலம், ரியாத்தைச் சேர்ந்த அந்த கிளப்புடன் அவர் 2027 வரை நீடிப்பார்.

கடந்த ஆண்டு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி ரொனால்டோவின் நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் அவர் முதல் பில்லியனர் கால்பந்து வீரர் ஆனார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!