Skip to main content

Advertisement

'காபி மீட்டுக்கு ரூ.499, மூவி டேட்டுக்கு ரூ.1,249': இளம் பெண்களை குறிவைக்கும் வாடகை காதலன் மோசடி

'வாடகைக் காதலன் சேவை' தொடர்பான விளம்பரங்கள் குறித்து ஹைதராபாத் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
x.com/SajjanarVC_IPS/
'வாடகைக் காதலன் சேவை' தொடர்பான விளம்பரங்கள் குறித்து ஹைதராபாத் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

"உங்களுக்கு ஒரு காதலன் வேண்டுமா? நாங்கள் ஒருவரை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம். அவர் செய்ய வேண்டிய வேலை, எவ்வளவு நேரத்தை உங்களுடன் செலவிட வேண்டும் என்பவனவற்றைப் பொறுத்து செலவிடும் நேரத்தைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என்ற விளம்பரங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்த விளம்பரங்கள் பெண்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை என்று ஹைதராபாத் போலீசார் கூறுகின்றனர்.

"குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு இணைய மோசடியில் ஈடுபடுவோர் உருவாக்கியுள்ள புதிய டேட்டிங் வலை" என்று ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் எச்சரித்தார்.

"நீங்கள் தனிமையால் அவதிப்படுகிறீர்களா? உங்களுடன் காபி குடிக்கவோ அல்லது திரைப்படத்துக்குச் செல்லவோ அழகான இளைஞர் வேண்டுமா? அதுவும் 50% தள்ளுபடியில்" என்ற வரிகளுடன், சமூக ஊடகங்களில் தோன்றும் வண்ணமயமான விளம்பர போஸ்டர்களின் பின்னணியில் இணைய மோசடி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த உளவியல் நிபுணர் அனிதா ஆரே, இளம் பருவத்தினரின் ஈர்ப்புகளையும் உணர்வுகளையும் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த விளம்பரங்களில் என்ன இருக்கிறது?

சமூக ஊடக கணக்குகளில் இத்தகைய விளம்பரங்கள் அதிகரித்து வருவதைத் தங்கள் கண்காணிப்பில் கண்டறிந்துள்ளதாக சஜ்ஜனார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தாங்கள் கண்ட சில விளம்பரங்களின் விவரங்களை சஜ்ஜனார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த விளம்பரங்களைப் பார்த்தால், இரண்டு முக்கிய அம்சங்களை கவனிக்க முடிகிறது. அவை,

  • உடன் செலவிட வேண்டிய நேரம்
  • அதற்கான கட்டண விவரம்

ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்துப் பேசிய ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார், "ஒரு மணிநேரம் காபி அருந்தி உரையாடுவதற்கு ரூ.499, திரைப்பட டேட்டிங்குக்கு ரூ.1,249, உடன் சேர்ந்து ஷாப்பிங் செல்வதற்கு ரூ.1,499, மேலும் நிகழ்ச்சிகள் அல்லது திருமணங்களுக்குத் துணையாக வர ரூ.1,999 என்ற அளவுகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக விளம்பரங்களில் கூறப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.

நேர அடிப்படையில் வாடகைக் காதலன் சேவைக்கான விலைப் பட்டியல் விளம்பரம். இது சஜ்ஜனாரின் கணக்கு மூலம் வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் ஒரு பகுதியாகவும் பதிவிடப்பட்டிருந்தது.
x.com/SajjanarVC_IPS
நேர அடிப்படையில் 'வாடகைக் காதலன்' சேவைக்கான விலைப் பட்டியல் விளம்பரம். இது சஜ்ஜனாரின் கணக்கு மூலம் வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் ஒரு பகுதியாகவும் பதிவிடப்பட்டிருந்தது.

அத்துடன், " முழு நாள் (10 மணிநேர) பேக்கேஜ் ரூ.4,499 என்று தனி கட்டண அட்டவணையையும் அவர்கள் வெளியிடுகின்றனர்," என்றும் அவர் கூறினார்.

காதலனை அனுப்பும் சேவையைக் கோரும் பெண்களின் விவரங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று கூறி, நேரடியாக குறுஞ்செய்தி அனுப்புமாறும் இந்த விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன.

இந்த விளம்பரங்களில் காட்டப்படும் இளைஞர்கள் உண்மையானவர்கள் அல்ல என்றும், அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை போலத் தோன்றுவதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக சஜ்ஜனார் கூறினார்.

"பெண்களின் விவரங்களைப் பெற்ற பிறகு, முன்பதிவு உறுதிப்படுத்தல், பாதுகாப்பு வைப்புத் தொகை, வாலட் பரிவர்த்தனை அல்லது க்யூ.ஆர் கோட் மூலமாக முன்பணம் வசூலிப்பது ஆகியவற்றைச் செய்கின்றனர். அதன் பிறகு கணக்குகளை முடக்கிவிட்டு காணாமல் போய்விடுகின்றனர்," என்று அவர் விளக்கினார்.

'வாடகைக் காதலன்' – இளம் பெண்களை இலக்கு வைக்கும் நூதன சைபர் மோசடி
Getty Images

'வாடகைக் காதலன்' வடிவில் விரிக்கப்படும் வலை

சைபர் குற்றங்கள் குறித்து போலீசாரும் அரசுகளும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தொடர்ந்து புதிய வகை மோசடிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

கால் சென்டர் மோசடிகள், போலி முதலீட்டு (டிரேடிங்) திட்டங்கள், டிஜிட்டல் கைது மோசடிகள், டேட்டிங் செயலிகள் என சைபர் குற்றங்கள் பல்வேறு வடிவங்களில் நடக்கின்றன.

தற்போது, வாடகைக் காதலன் (Rent Boyfriend) என்ற பெயரில் நடைபெறும் மற்றொரு புதிய சைபர் மோசடியை ஹைதராபாத் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இளம் பெண்கள் நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்தப் புதிய வகை மோசடி குறித்து இப்போதே விழிப்புடன் செயல்படாவிட்டால், எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் பிபிசியிடம் தெரிவித்தார்.

"போலீசார் சமூக ஊடக தளங்களைக் கண்காணித்தபோது, இந்த வகை மோசடி நடந்து வருவது தெரிய வந்தது. இந்த வடிவத்திலான மோசடி சமீபத்தில்தான் தொடங்கியதாகத் தெரிகிறது. இதை யார் இயக்குகிறார்கள், இதன் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். இது பிற மாநிலங்களில் இருந்து செயல்படுவதாகத் தெரிகிறது," என்று சஜ்ஜனார் கூறினார்.

இந்த மோசடியான விளம்பரங்கள் மீது ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இணையத்தில் வெளியாகும் விளம்பரங்களையும் அவற்றில் கூறப்படும் வாக்குறுதிகளையும் நம்பி நேரடியாகச் சந்திக்கச் சென்றால், காதல் என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகள் அளித்து உறவுகளை உருவாக்கி ஏமாற்றப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

"இவர்கள் வாடகைக் காதலன் சேவையைக் கேட்டு அணுகும் பெண்களின் மொபைல் எண்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஆபாச உள்ளடக்கங்களுடன் அவர்களைத் தொடர்புபடுத்தி, மிரட்டிப் பணம் பறிக்கும் (பிளாக்மெயில்) அபாயமும் உள்ளது," என்று சஜ்ஜனார் எச்சரித்தார்.

இத்தகைய சைபர் குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சந்தேகத்துக்குரிய பதிவுகளைப் பார்த்தாலோ, உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண் அல்லது சைபர் க்ரைம் இணையதளம் மூலம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

'வாடகைக் காதலன்' – இளம் பெண்களை இலக்கு வைக்கும் நூதன சைபர் மோசடி
NCRB.GOV.IN

ஆண்டுதோறும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

இந்தியாவில் சைபர் குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவணப் பதிப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் நாட்டில் 65,893 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 86,420 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2024ஆம் ஆண்டில் 1,01,928 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவற்றில், 18,615 வழக்குகள் பெண்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவை. மொத்தம் 601 சைபர் மிரட்டல் (Cyber Blackmailing) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 370 வழக்குகள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவாகியுள்ளன.

'பெற்றோர் அணுகுமுறை மாற வேண்டும்'

குழந்தைகள் வளர்ந்து இளம் வயதை அடையும் காலத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் மற்றும் அவர்கள் மீது பெற்றோர்கள் காட்டும் அணுகுமுறைகளில் மாற்றம் தேவை என்று உளவியலாளர் அனிதா ஆரே அறிவுறுத்துகிறார்.

"குழந்தைகள் இளம் வயதை அடையும்போது, பாலின ரீதியாக ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது. அதோடு, தங்கள் நண்பர்களுக்கு காதலர்கள் இருப்பதாக நினைப்பதால், 'நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற எண்ணத்துடன் இத்தகைய விளம்பரங்களின் மீது ஆர்வம் காட்ட வாய்ப்புகள் அதிகம் உள்ளது," என்று அவர் கூறினார்.

"வீட்டில், 'அவர்கள் நம்முடைய குழந்தைகள்தானே' என்ற நெருக்கத்தின் காரணமாக, பெற்றோர்கள் பல நேரங்களில் எதிர்மறையான வார்த்தைகளையே பேசுகின்றனர். ஆனால், குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு முன், அவர்களுடைய நல்ல அம்சங்களையும் சாதகமான குணங்களையும் பெற்றோர் முதலில் பாராட்ட வேண்டும்," என்று அனிதா கூறுகிறார்.

மேலும், வீட்டுக்கு வெளியே இருக்கும் நபர்கள் அல்லது பணம் பெற்றுக்கொண்டு பழகும் சிலர், எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் புகழ்ந்து பேசுவதன் மூலம் இளம் பெண்களைத் தங்கள் வலையில் சிக்கவைக்க முயலக்கூடும் என்றும், அதன் விளைவாக அவர்கள் மோசடிக்கு ஆளாகும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!